(தி.மலை) குட்கா விற்ற கடைக்கு சீல் அதிகாரிகள் அதிரடி

சேத்துப்பட்டு, செப்.22: சேத்துப்பட்டில் குட்கா விற்ற கடைக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் ஹான்ஸ், குட்கா, பான்பராக் , பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் உத்தரவுப்படி நகரங்கள், பேரூராட்சிகள், கிராமப்புறங்கள் என அனைத்து இடங்களிலும் வணிக வளாகங்கள், பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேத்துப்பட்டு- வந்தவாசி சாலை காமராஜர் சிலை அருகே விநாயகம் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில், குட்கா விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுப்பிரமணிக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையில் சோதனை நடத்தி குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோருடன் சென்று கடைக்கு தற்காலிகமாக அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: