தென்காசி பஜார் பகுதியில் லாரிகளில் இருந்து சரக்குகளை இறக்க நேரக்கட்டுப்பாடு

தென்காசி,செப்.22: தென்காசி பஜார் பகுதியில் லாரிகளிலிருந்து சரக்குகளை இறக்க விதிக்கப்பட்டுள்ள புதிய நேரக்கட்டுப்பாட்டை நீக்கி பழைய முறையே தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று தென்காசி வர்த்தக சங்கத்தினர் டிஎஸ்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். தென்காசி வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் ராஜசேகரன், செயலாளர் பரமசிவன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் நேற்று தென்காசி டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2019ம் ஆண்டு தீர்மானத்தின்படி பஜார் பகுதியில் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் லாரியில் சரக்கு இறக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்சமயம் கடந்த 10.9.2022 அன்று தென்காசி டிஎஸ்பி மற்றும்  போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆகியோர் கூட்டம் போட்டு இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே லாரியில் சரக்கு இறக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை என்பது கடைகளுக்கு சரக்கு இறக்க சாத்தியமில்லை. எனவே தாங்கள் 2019ம் ஆண்டு தீர்மானத்தின் படி இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் லாரியில் சரக்குகளை இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் துணைத்தலைவர்கள் அன்பழகன், அப்துல்அஜீஸ், துணை செயலாளர்கள் முருகன் ராஜ், அகமது மீரான், சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன், ஆலோசகர் அழகராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

ஒத்துழைக்க வேண்டும்: இது குறித்து தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு கூறுகையில், ‘தென்காசி நகரில் பஜார் பகுதிகள் அமைந்துள்ள சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கூலக்கடை பஜார், மவுண்ட் ரோடு உள்ளிட்டவை குறுகலான சாலை உள்ள பகுதிகளாகும். இந்த பகுதிகளில் சரக்கு ஏற்றி வரும் லாரிகள் அதிகமான நேரம் நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி வாகனங்கள், கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்தப் பகுதிகளில் யாரேனும் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல முடியாத சூழல் உள்ளது. சரக்குகளை பாதுகாப்பான முறையில் மூடி வைத்து செல்லாமல் இஷ்டத்திற்கு உயரமாக பாதுகாப்பின்றி அடுக்கி கொண்டு செல்கின்றனர். பல சமயங்களில் அவை விழும்போது அருகில் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கூலக்கடை உள்ளிட்ட பஜார் பகுதிகளில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடம் மேம்பால பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து சிறிய வாகனங்கள் மூலம் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.  மேலும் பஜார் பகுதியில் லாரியை நிறுத்துவதற்கு ஏதேனும் இடம் இருந்தால் தெரிவிக்குமாறு வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவ்வாறு இடம் இருந்தால் காவல்துறை சார்பில் அந்த இடத்தை லாரி நிறுத்துகின்ற அளவிற்கு தயார் செய்து தருகிறோம் என்று தெரிவித்திருக்கிறோம். பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், நோயாளிகள் நலன் கருதி லாரி ஓட்டுனர்களும் வர்த்தகர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: