7 டன் வெள்ளைக்கல் லாரியுடன் பறிமுதல்

சேலம், செப்.22: சேலம் கருப்பூரில் லாரியுடன் 7 டன் வெள்ளைக்கல் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் கருப்பூர் உப்புக்கிணறு, ஊத்தோடை பகுதியில் இருந்து வெள்ளைக்கல் கடத்தப்படுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கனிமவளத்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது உப்புக்கிணறு வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த லாரியில் வெள்ளைக்கல் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. லாரியுடன் 7 டன் வெள்ளைக்கல்லை பறிமுதல் செய்த அதிகாரி, லாரியை கருப்பூர் போலீசில் ஒப்படைத்தார். லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ஓமலூரை சேர்ந்த பெருமாள்(44) என்பதும், வெள்ளைக்கல்லை மேட்டூருக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கருப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: