அருணாசல ஆசாரி தெரு ஒருவழிப்பாதையாக மாற்றம்

சேலம், செப்.22:சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டியுள்ள சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அருணாசல ஆசாரி தெரு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி அண்ணா சிலை அருகே கடந்த சில நாட்களாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே சாலை குண்டும், குழியுமானது. இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் கீழே விழும் சம்பவங்கள் நடந்து வந்தது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர். இதையடுத்து அச்சாலை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

இதையடுத்து அங்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பழைய பஸ் ஸ்டாண்டில் வெளியே செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் அருணாசல ஆசாரி தெரு வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால் இச்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அம்மாப்பேட்டையில் இருந்து டவுன் பஸ்கள் வழக்கம்போல் கோட்டை பகுதியை கடந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேருகிறது. இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியையொட்டியுள்ள சாலை வழியாக கடந்து செல்கிறது.

Related Stories: