சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்

திருச்செங்கோடு, செப்.22: திருச்செங்கோடு தாலூகா எலச்சிபாளையம் ஒன்றியம், புத்தூர் ஏரியில் நவீன இயந்திரங்கள் மூலம் சீமை கருவேல் மரங்களை அகற்றும் பணியை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். நாமக்கல் மாவட்டத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் என்ற திட்டம், கடந்த ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு அரசு துறைகளின் சார்பாக, இதுவரை 5லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நீர்வளத்துறையின் ஏரிகளில் ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல் மரங்களை முற்றிலும் அகற்றி, கரைகளை பலப்படுத்திடவும் நீர் ஆதாரத்தை பெருக்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, திருச்செங்கோடு தாலூகாவில், 311 ஏக்கர் பரப்பளவில் உள்ள புத்தூர் ஏரியில் சீமைகருவேல் மரங்களை வேருடன் நவீன இயந்திரங்களின் மூலம் அகற்றும் பணியினை, கலெக்டர் தொடங்கி வைத்தார்.இந்த பணிகளின் போது, அகற்றப்படும் மரங்கள் வேருடன் தூளாக்கும் இயந்திரம் மூலம், முற்றிலும் தூளாக்கப்படுகிறது. இதன் காரணமாக வேர் பகுதிகளில் இருந்து, புதிதாக மரம் முளைக்க வாய்ப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க, கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இளவரசி, தசில்தார் அப்பன்ராஜ், நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல் திட்ட தொடர்பு அலுவலர்  ராஜேஸ் கண்ணன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: