தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தர்மபுரியில் 2.82 லட்சம் குடும்பத்தினர் பதிவு

தர்மபுரி, செப்.22:  தர்மபுரி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 2.82 லட்சம் குடும்பத்தினர் பதிவு செய்துள்ளனர். நடப்பாண்டு வேலை செய்ததற்கான செலவு ₹100 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், கடந்த 2005ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம், பின்னர் 2009ம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில், ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் ஊதியம், அவர்களது வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, பயனாளிகளின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு, தேசிய மின்னணு நிதி மாற்றம் மூலமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் வேலைகள் அனைத்தும், கைபேசி செயலி மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புகைப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பிரதி செவ்வாய்கிழமை தோறும், வேலை கேட்பு விண்ணப்பத்தின் அடிப்படையில், வேலை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இணையத்திலிருந்து பெறப்படும் மின்னனு வருகைப்பட்டியலின்படி, பயனாளிகளுக்கு பிரதி வியாழக்கிழமை முதல் புதன்கிழமை வரை பணி வழங்கப்படும். இதனால் எவ்வித பாரபட்சமும் இன்றி, வெளிப்படையான முறையில் பணி கோருபவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கான சம்பளம் தற்போது ₹281ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விவசாயம் பிரதானமாக உள்ள தர்மபுரி மாவட்டத்தில், விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் செய்யும் பணியாளர்களை, விவசாயம் மற்றும் தோட்டப்பணிகளுக்கு பயன்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயம் மேம்படும்,’ என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், 2 லட்சத்து 82 ஆயிரத்து 721 குடும்பத்தினர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், வேலை செய்ய பதிவு செய்துள்ளனர். இதில், 2 லட்சத்து 26,605 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 1 லட்சத்து 27,960 பேர் வேலை செய்துள்ளனர். நடப்பாண்டு இத்திட்டத்தின் கீழ் கட்டுமான பொருட்கள் மற்றும் மனித சக்திக்காக செலவு செய்யப்பட்ட தொகை ₹100 கோடியே 41 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு ₹149 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ₹107 செலவு செய்யப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ₹100 கோடிக்கு மேல் செலவு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்கப்படுகிறது. தற்போது புதியதாக கலைஞரின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாய பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேலையில் சேர 18வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். பணிகள் மேற்கொள்ளப்படும் ஊராட்சிக்குள் குடியிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படும். முறைப்படி பதிவு செய்து, வேலை அட்டை பெற்று கொள்ளலாம். எந்த ஒரு சாதாரண உடல் உழைப்பாலான வேலைகளையும் செய்வதற்கு விருப்பமுடை ஆண், பெண் இருபாலருக்கும் வேலை வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: