மாவட்டத்தில் 110 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்

கிருஷ்ணகிரி, செப்.22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 இடங்களில் நேற்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமலால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கோவிந்தன் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர், வேப்பனஹள்ளி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், காவேரிப்பட்டணம், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் 110 இடங்களில் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு, கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகத்துடன், கிராம பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகளும், கொசு மற்றும் கொசு புழுக்கள் ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

பருவநிலை மாற்றம் காரணமாக சிலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல், தலைவலி பாதிப்பு உள்ளவர்கள், சுயமருத்துவம் செய்து கொள்ளாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு சிகிச்சை பெறலாம். யாரும் அச்சப்பட தேவையில்லை. ஒவ்வொரு நாளும் மருத்துவ குழுவினர் 4 இடங்களில் முகாம் நடத்தி, பரிசோதனைகள் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் 11 நடமாடும் மருத்துவ குழுவினரும், 20 குழந்தைகளுக்கான சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: