கிருஷ்ணராயபுரம் பகுதியில் மேடு பள்ளமான நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கிருஷ்ணராயபுரம், செப். 22: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தார்கள் உருண்டு,பெயர்ந்து மேடு பள்ளமாக மாறிபோன கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில் நகரான கோவையையும், தலைநகரான சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக விஸ்தரிப்பு செய்யப்பட்டது. சாலை விஸ்தரிப்பு செய்து மணவாசியில் சுங்க சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது கரூர் முதல் மாயனூர் வரை நான்கு வழிச்சாலையாகவும், மாயனூர் முதல் திருச்சி வரை இரு வழிச்சாலையாக உள்ளது. கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார், பஸ், லாரி, வேன், கனரக வாகனங்கள் போன்ற வாகனங்கள் சென்று வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இந்த சாலையின் வழியாக போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அந்த அளவில் சாலை கட்டமைப்பு போதுமான அளவில் இல்லாமல் தான் இருந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்குட்பட்ட மாயனூர் தண்ணீர்பாலம், கிருஷ்ணராயபுரம் கள்ளுக்கடை பாலம், கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாண்டு, மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் போட்ட தார்கள் வெயிலுக்கு உருகி, தார்கள் உருண்டு பெயர்ந்து மேடு பள்ளமாக கிடக்கிறது. அதை கண்டு கொள்ளவே இல்லை இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம். சாலை இப்படி மேடு பள்ளமாக இருப்பதால் இருசக்கர வாகன ஒட்டிகள் மிகவும் தடுமாறுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஒட்டிகள் தடுமாறி சாலைகளில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குண்டு குழியால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திடீரென ஓட்டுனர் கட்டுப்பாடு இழப்பதாலே பெரும்பாலான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

குறிப்பாக கிருஷ்ணராயபுரம் கள்ளுக்கடை பாலத்தில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது. இங்கு கடந்த ஆண்டு நடந்த ஒரு விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்போது சாலையை சீரமைக்க வேண்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர்,ஆனால் காலமும், நேரமும் தான் போய்கொண்டிக்கிறது. தவிர சாலை சீரமைத்தபாடில்லை. விபத்துகள் தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. வருடக்கணக்கில் சாலை இப்படி கிடக்கிறது. இந்த சாலை வழியாக தான் இந்திய தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணைய அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.

இது அவர்களின் கண்களுக்கு படவில்லையா? என பொதுமக்கள் கேட்கின்றனர். வாகனங்களுக்கு சுங்க கட்டணம் மட்டும் வசூலித்தால் மட்டும் போதுமா அவர்கள் பயணம் செய்ய தரமான சாலை அமைத்து கொடுப்பதும் அரசின் கடமையாகும். என்பதை புரிந்து கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள மேடு பள்ளங்களை சீரமைத்து தர இந்திய தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: