விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை; பதிவு மாவட்டத்துக்குள் அமையும் வகையில் சார் பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லை சீரமைப்பு

கரூர், செப். 22: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பதிவுத்துறை சார்பில் சார்பதிவாளர் அலுவலகங்கள் எல்லை வரையறை செய்தல் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், எம்எல்ஏ மாணிக்கம், திருச்சி மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: பதிவுத்துறையில் தற்போது ஸ்டார் 2.0 திட்டத்தின் கீழ் பதிவுப் பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. மேலும், வருவாய்த்துறையின் தமிழ் நிலம் மென் பொருளுடன் ஒருங்கிணைந்து தானியங்கி பட்டா மாற்றம் தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சில சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் சில வருவாய் கிராமங்கள் வேறு வருவாய் மாவட்டத்தின் ஆட்சி எல்லையில் அமைந்துள்ள நிலை உள்ளது. பட்டா மாற்றம் போன்ற பதிவுத்துறை, வருவாய்த்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு இது இடையூறாக உள்ளது. எனவே, ஒரு வருவாய் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் முழுவதும் அந்த வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பதிவு மாவட்டத்தின் ஆட்சி எல்லைக்குள் அமையும் வகையில் சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைகள் சீரமைக்கப்படும். மேலும் கரூர் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட ராச்சாண்டார் திருமலை, முதலைப்பட்டி வடசேரி, புழுதேரி ஆகிய வருவாய் கிராமங்கள் திருச்சி வருவாய் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள உறையூர் மற்றும் 1 இணை சார்பதிவகம் ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களின் எல்லைக்குள் அமையப்பெற்று, இந்த சார்பதிவகங்களின் வழி ஆவணப் பதிவு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த கிராமங்களை கரூர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட நங்கவரம் சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பது குறித்தும், கரூர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட சின்னியம்பாளையம், நாகனூர், தோகைமலை, பொருந்தலூர், கல்லடை, பாதிரிப்பட்டி, ஊத்துப்பட்டி, பில்லூர் ஆகிய கிராமங்கள் திருச்சி வருவாய் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள மணப்பாறை சார்பதிவகத்தின் எல்லைக்குள் அமையப்பெற்று இந்த சார்பதிவகத்தின் வழி ஆவணப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த கிராமங்களை கரூர் மாவட்டத்திற்குட்பட்ட குளித்தலை சார்பதிவாளர் அலுவலகத்துடன் இணைப்பது குறித்தும், திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட திருக்கூர்ணம் என்ற கிராமம், கரூர் வருவாய் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அரவக்குறிச்சி சார்பதிவகத்தின் எல்லைக்குள் அமையப்பெற்று, அந்த சார்பதிவகத்தின் வழி ஆவணப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த கிராமத்தினை திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பழனி பதிவு மாவட்டத்திற்கு மாற்றம் செய்வது குறித்தும், திருச்சி வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட கரூர் பதிவு மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள பெருகமணி, பெட்டவாய்த்தலை, சிறுகமணி கிழக்கு, சிறுகமணி தெற்கு, தவளைவீரன்பட்டி, வெள்ளாளப்பட்டி, இனாம்புதூர், வையமலைப்பாளையம் ஆகிய 8 கிராமங்களையும் திருச்சி பதிவு மாவட்டத்துடன் இணைப்பது குறித்தும் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: