தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் பற்றி புகார் கூறிய எடப்பாடிக்கு பரிசு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வேன்

தாராபுரம், செப். 22: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் பற்றி புகார் கூறிய எடப்பாடிக்கு பரிசு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 8,137 மாணவர்கள் மற்றும் 9,643 மாணவிகளுக்கு என மொத்தம் 17,780 மாணவ-மாணவிகளுக்கு ரூ.9 கோடியே 2 லட்சத்து 46 ஆயிரத்து 831 மதிப்பில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,897 மாணவர்கள் மற்றும் 7,835 மாணவிகள் என மொத்தம் 14,732 மாணவ-மாணவிகளுக்கு ரூ.7 கோடியே 48 லட்சத்து 4 ஆயிரத்து 295 மதிப்பில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் நேற்று தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம், கோவிந்தாபுரம், குண்டடம், ஊதியூர், மூலனூர், கன்னிவாடி, வடுகப்பட்டி, எலுகாம்வலசு, கொளத்துப்பாளையம், பொங்கலூர் கேத்தனூர், பெருந்தொழுவு, கொடுவாய், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 24 அரசு பள்ளிகளை சேர்ந்த 2,839 மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 12 ஆயிரத்து 933 மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிமுக ஆட்சிதான் நடந்து வந்தது.

அவர்கள் ஆட்சியில்தான் போதை  பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து இருந்தது. டெல்லியில் அமித்ஷாவிடம் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் பற்றி புகார் கூறிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் காவல்துறை ஐஜி ஜார்ஜ், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் உடன் அழைத்துச் சென்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அவர் சொன்ன அந்த வாசகம் அதன் பொருள் இந்த ஆண்டினுடைய சிறந்த நகைச்சுவையாக இருக்கலாம். அதற்கு அவருக்கு பரிசளிக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுத்து பரிந்துரை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தாராபுரம் ஆர்டிஓ குமரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வாசுகி, தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புகண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செந்தில்குமார், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் குமார், துணைத்தலைவர் அபிராமி அசோகன், மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்தி, மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் தண்டபாணி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி, இளைஞர் அணி கார்த்திக், நகர செயலாளர் முருகானந்தம்,  மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், நகர அவை தலைவர் கதிரவன்,

நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் நகர செயலாளர் தனசேகர், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், ருத்ராவதி பேரூர் கழகச் செயலாளர் அன்பரசு, ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் மயில்சாமி, ஊராட்சி தலைவர்கள் குமரவேல், மகேந்திரன், பாலசுப்ரமணியம், தலைமை ஆசிரியர்கள் சாந்தி, சாரதா, மணிமொழி, ஹெலன், பாஸ்கரன், மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: