அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம்

குன்னூர், செப்.22: குன்னூரில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் பேரிடர் காலங்களில் பெறும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நீர் ஓடைகள், சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கட்டிடங்களை கட்ட உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் பேரிடர் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.  குன்னூர் பகுதியில் அதிகளவில் விதி மீறிய கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது, தேயிலை தோட்டங்களை அழித்து சாலை அமைப்பது மற்றும் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் காட்டேஜ்கள் கட்டும் பணிகள் பெருமளவில் நடந்து வருகிறது. நீரோடையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதால்  மழை காலங்களில் வெள்ளம் அதிகரித்து பேரிடர் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளன. குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 1681. கடந்த இரண்டு ஆண்டுகளில் விதிமீறி கட்டபட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை 213. குறிப்பாக, ஒரு வார்டில் 15க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில், சீல் வைத்த 72 கட்டிடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் நிர்வாகம்  32 கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்தது. ஆனால், அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களை நகராட்சி  ஆணையாளர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், குன்னூர் அருகே நன்கம் செல்லும் சாலையில் கண்ணிமாரியம்மன் கோவில், டானிக் டன் பிரிட்ஸ், புரூக்லேண்ட், மாடல் ஹவுஸ், மவுண்ட் பிளசண்ட், ராஜாஜி நகர் மற்றும் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஓராண்டில் 242 கட்டிடங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளது. பல கட்டிடங்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கி சீல் வைத்தாலும் தற்போது அனைத்து கட்டிடங்களும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி, நகராட்சி குடியிருப்புகளை பல லட்சம் ரூபாய்க்கு தனியாருக்கு விற்பனை செய்துள்ளது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் தற்போது கட்டிடங்கள் முழுமையாக கட்டிய பின்னரே அனுமதிக்கு காத்திருக்கின்றனர். முன்னாள் சப் கலெக்டர் ரன்ஜித் சிங் ராஜாஜி நகர் பகுதியில் நீரோடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போது மீண்டும் அந்த பகுதியை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே போல், அட்டடி பகுதியில் தேயிலை தோட்டத்தை அழித்து பல காட்டேஜ்கள்‌ கட்டுமான  பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐயப்பன் கோயில் பகுதியில் பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,``குன்னூர் நகரில் நீரோடை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கு அனுமதி பெற்று வணிக வளாகம் நடத்தி வந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. உரிமையாளர்கள் நீதி மன்றத்தின் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தற்போது உதகை மற்றும் கோத்தகிரி பகுதியில் ஓடை ஆக்கிரமிப்புகளை ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரியான சுர்ஜித் சிங் தலைமையில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குன்னூர் பகுதியில் நீரோடை குறித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்தால் மட்டுமே முழுமையான  விவரங்கள் தெரியவரும்’’ என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர் சிவதாஸ்  கூறுகையில்: ``இந்த நிலை தொடர்ந்தால் இயற்கை பேரிடர் காலங்களில் பெறும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகும்.

வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற நீரோடைகளில் கட்டுமான பணியில் மேற்கொள்ள உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: