வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

ஊட்டி, செப்.22: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் நேற்று சாலையோர கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இச்சமயங்களில் கனமழை பெய்யும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பெரிய அளவிலான நிலச்சரிவுகள், சாலை துண்டிப்பு ஏற்படுதல் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இதனால், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அனைத்து பகுதிகளிலும் உள்ள மழை நீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தங்கு தடையின்றி ஓட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவைகளை தூர்வார வேண்டும் என கடந்த ஆண்டே தமிழக அரசு சிறப்பு முகாமினை நடத்தியது. இந்த முகாமின் போது, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலையோரங்களில் இருந்த மழை நீர் வடிகால்கள் சீரமைக்கப்பட்டன. ஆனால், இம்முறை தமிழக அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலையோரங்களில் உள்ள மழை நீர் கால்வாய்களில் தூர் வாரும் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய நான்கு உட்கோட்டங்களில் உள்ள சாலையோர கால்வாய்கள், மோரிகள், சிறு பாலங்கள், பாலங்கள், குழாய் பாலங்கள் ஆகியவை தூர் வாரப்பட்டுள்ளது. தொடர்ந்து, தூர் வாரும் பணிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உத்தரவின் போில் தற்போது மாவட்டம் முழுவதும் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: