தடாகம் ரோட்டில் பள்ளத்தில் சிக்கிய பஸ்

கோவை செப்.22: கோவை தடாகம் ரோட்டில் சிவாஜி காலனி, கே.என்.ஜி புதூர் உட்பட பல்வேறு பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல இடங்களில் குழி தோண்டப்பட்டது. சில இடங்களில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக குழாய் பதிக்காமல், குழியை முழுவதும் மூடாமல் அறைகுறையாக விட்டுவிட்டனர். தடாகம் ரோட்டில் பல இடங்கள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இடையர்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி அருகே குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தது. இவ்வழியாக சென்ற ஒரு தனியார் பஸ், சரக்கு வேன் பள்ளத்தில் 5 அடி ஆழத்தில் புதைந்தன. மேலும் சில இரு சக்கர வாகனங்கள் புதை மண்ணில் சிக்கின. இது தொடர்பாக மாநகராட்சிக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கிரேன் மூலமாக பஸ், வேன் மீட்கப்பட்டது. பணி நடக்கும் இடங்களில் முறையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை.

குழி தோண்டிய இடங்களை மூடவில்லை. சில இடங்களில் பள்ளங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நீர் கசிவு ஏற்பட்டு பள்ளத்தில் தேங்கியது. பொதுமக்கள் கூறுகையில், ‘‘ரோடு தோண்டி பல நாட்களாகிவிட்டது. சரியாக மூடவில்லை. குழாய் பதித்த பின்னரும் தாமதம் செய்கிறார்கள். பள்ளி செல்லும் வாகனங்கள் திணறி கொண்டிருக்கிறது. அடிக்கடி சிலர் பள்ளத்தில் சிக்கி காயமடைகின்றனர். தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். ரோட்டோரம் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது. இதை சரி செய்யவேண்டும் ’’ என்றனர்.

Related Stories: