குடிநீருக்காக 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்க துரித நடவடிக்கை

சென்னிமலை, செப். 22: சென்னிமலை அருகே குடிநீருக்காக வழங்கிய மும்முனை மின்சாரத்தை பகுதி நேர மும்முனை மின்சாரமாக மாற்றக்கூடாது என்னும் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதற்காக அமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் இருந்து பாலதொழுவு, பனியம்பள்ளி, ஓட்டப்பாறை, புதுப்பாளையம் ஆகிய 4 ஊராட்சி பகுதிகளுக்கு குழாய்கள் அமைத்து மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதற்காக தடையின்றி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று பெரியாண்டிபாளையத்தில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து புதுப்பாளையம், அய்யம்பாளையம், திப்பம்பாளையம், வெங்கமேடு, ஓலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் 12 மணி நேர மும்முனை மின்சாரம் மட்டும் வழங்கப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பேச்சுவார்த்தை நடத்த பெருந்துறை மின்வாரிய அலுவலகத்திற்கு வருமாறு மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் பெருந்துறையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விவசாயிகளிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் தொடர்பு கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விளக்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குடிநீர் தேவைக்காக இதுவரை 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்கியதுபோல் தொடர்ந்து இனிமேலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என விவசாயிகளிடம் உறுதியளித்தனர். இதையடுத்து, கோரிக்கையை நிறைவேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: