மாநில கல்விக் கொள்கையை வரையறுக்க தமிழகத்தில் 8 இடங்களில் கருத்து கேட்பு கூட்டம்: மதுரையில் 6 மாவட்டங்களுக்கு இன்று நடக்கிறது

நெல்லை, செப். 21: மாநில கல்விக் கொள்கை தொடர்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் 8 மண்டலங்களாக பிரித்து கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மதுரையில் இன்று 6 மாவட்ட கல்வியாளர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.

தமிழகத்திற்கு என  தனியாக மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை  நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அரசு  அமைத்துள்ளது.

இந்த மாநிலக் கல்விக் குழுவில் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள்  துணைவேந்தர் ஜவஹர்நேசன், யுனிசெப் முன்னாள் கல்வி  நிபுணர் அருணா ரத்னம்,  மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ராம சீனுவாசன்,  பேராசிரியர் சுல்தான் அகமது,  மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர்  கருப்பசாமி, அகரம் பவுண்டேசன் ஜெய தாமோதரன், நாகை மாவட்டம்  கீச்சான்குப்பம் பஞ். யூனியன்  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நீதிபதி முருகேசன் தலைமையிலான இந்த உயர்மட்டக் குழு மாணவ, மாணவிகள், பெற்றோர், மாற்றுத் திறனாளிகள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் என பல தரப்பினரிடம் 8 மண்டலங்கள் வாரியாக சுற்றுப்பயணம் செய்து கருத்துக்களை கேட்கிறது.

இந்தக் குழுவின் நெல்லை மண்டல அளவிலான முதல் கருத்துக்  கேட்புக் கூட்டம், நெல்லையில் நேற்று நடந்தது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தினர் பங்கேற்றனர். மதுரை மண்டல கருத்து கேட்பு கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (21ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தினர் கலந்து கொள்கின்றனர்.  

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் அடங்கிய திருவாரூர் மண்டல கருத்து கேட்பு கூட்டம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் அக்.14ம் தேதி காலை 10.30 மணிக்கும், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் அடங்கிய திருச்சி மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் அக்.15ம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்திலும் நடத்தப்படுகிறது.

பின்னர் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கிய சேலம் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அக்.28ம் தேதி காலை 10.30 மணிக்கும், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டல அளவிலான கூட்டம் அக்.29ம் தேதி காலை 10.30 மணிக்கு கோவை கலெக்டர் அலுவலக வளாகத்திலும் நடக்கிறது. தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் அடங்கிய வேலூர் மண்டல அளவிலான கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நவ.4ம் தேதி காலை 10.30 மணிக்கும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் அடங்கிய சென்னை மண்டல அளவிலான கூட்டம் நவ.5ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்திலும் நடத்த உயர்மட்டக் குழு ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories: