வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு: சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு

ஊட்டி, செப். 21:  வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950ன் படி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை தூய்மையாக்குதல், வாக்காளர்களின் பதிவினை உறுதி செய்வது, தன் தகவல்களை உறுதிபடுத்தி பாதுகாக்கவும், ஒரே வாக்காளரின் பதிவு ஒரே தொகுதியில் பலமுறை பதிவாகி உள்ளதையும், வெவ்வேறு தொகுதிகளில் பதிவாகி உள்ளதை கண்டறிந்து சரி செய்யும் பொருட்டு வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர்களின் தானே முன்வந்து சுய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பெற்று வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட உள்ளது.

அதன் படி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி.,யில் சமர்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் தேசிய வாக்காளர்கள் சேவை மையம் (NVSP) மற்றும் வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப் (VHA) ஆகியவைகளின் மூலமாகவும், வீடு தேடி வரும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் வாக்காளர்கள் தங்களது சுய விருப்பத்துடன் ஆதார் எண்ணை தெரிவித்து இணைத்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் முகமது குதுரத்துல்லா உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: