உச்சத்தில் மலை காய்கறிகளின் விலை: மகிழ்ச்சியில் நீலகிரி மாவட்ட விவசாயிகள்

ஊட்டி, செப். 21: நீலகிரி  மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கேரட், பீட்ரூட் மற்றும் பீன்ஸ்  ஆகியவை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி  மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் செய்கிறார்கள். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட்,  உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பட்டாணி, பூண்டு உட்பட  பல்வேறு மலை காய்கறிகள் மற்றும் சைனீஷ் வகை காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

இங்கு பயிரிடப்படும் மலை காய்கறிகள் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு கொண்டுச்  செல்லப்பட்டு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும்  கொண்டுச் செல்லப்படுகிறது. அதேபோல், ஊட்டியில் இருந்து நேரடியாக சென்னை,  திருச்சி, திருநெல்வேலி உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டுச் சென்று  விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி  செய்யப்படும் பெரும்பாலான காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.  

குறிப்பாக, கேரட் கிலோ ஒன்று ரூ.100 வரை ஏலம் போகிறது. இதனால், கேரட்  பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல், பீட்ரூட் கிலோ ஒன்று  ரூ.70 முதல் 80 வரையிலும், பீன்ஸ் கிலோ ஒன்று ரூ.90 முதல் 100 வரையிலும்  விலை போகிறது. இது தவிர உருளைக்கிழங்கு, பட்டாணி போன்ற மலை  காய்கறிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. இதனால், மலை காய்கறிகளை பயிரிட்ட  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், நீலகிரியில் உற்பத்தி  செய்யப்படும் மலை காய்கறிகளுக்கு கிராக்கி அதிகரித்துள்ள நிலையில், தற்போது அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் அறுவடையிலும் மும்முரம் காட்டி  வருகின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக அடிக்கடி  பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், வெளி மாநிலங்களுக்கு, வெளி  மாவட்டங்களுக்கு அதிகளவு காய்கறிகள் கொண்டுச் செல்ல முடியாமல் விவசாயிகள்  பாதிக்கப்பட்டனர். மேலும், விலையும் குறைந்து காணப்பட்டது.

ஆனால், தற்போது  கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த சில மாதங்களாக வழக்கம் போல்,  அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகள் கொண்டுச் செல்லப்படுகிறது.

மேலும், மலை  காய்கறிகளுக்கு கூடுதல் விலை கிடைத்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட  காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், மலை காய்கறிகள் விலை  கிடு கிடுவென உயர்ந் நிலையில், விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சியடையும்  சம்பவமும் அரங்கேறி வருகிறது.

Related Stories: