நீலகிரி குந்தா பகுதிகளின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அப்பர்பவானி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும்

மஞ்சூர், செப். 21:  குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அப்பர்பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகள் மற்றும் குந்தா, முள்ளிகூர், பாலகொலா ஊராட்சிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சூர் உள்பட பெரும்பாலான பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

குந்தா பகுதியில் உள்ள நீர் தேக்கங்கள் முறையாக பராமரிக்காததாலும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை, குடியிருப்புகளுக்கு ஏற்றவாறு புதிய குடிநீராதாரங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்காததே குடிநீர் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாகும். பெரும்பாலான நீர்த்தேக்கங்களிலும் சேறு,சகதிகள் நிறைந்துள்ளதால் குறைந்த அளவிலான நீரே சேமிக்க முடிகிறது. இதனால் கோடை மற்றும் வறட்சி காலங்களில் கிராமங்கள் தோறும் பற்றாக்குறை ஏற்படுவதுடன் குடிநீர் விநியோகம் அடியோடு பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் காலி குடங்களுடன் தொலை தூரங்களுக்கு குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது. இந்நிலையில் குடிநீர் தட்டுபாடு பிரச்னைக்கு தீர்வு காண கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள நீர் தேக்கங்களை தூர்வாரி அதில் உள்ள சேறு, சகதிகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும். இது மட்டுமின்றி அதிகரித்து வரும் மக்கள் தொகைக் கேற்ப ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கவும், எதிர்காலத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அப்பர்பவானி கூட்டு நீர் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி உள்ளிட்ட மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாகவும், மாவட்டத்தில் பெரிய அணையாகவும் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து குழாய்கள் மூலம் நீரை கொண்டு வந்து கிண்ணக்கொரை, மேல்குந்தா, மஞ்சூர், பிக்கட்டி, எடக்காடு, உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் சேமிப்பதன் மூலம் குந்தா பகுதிகளின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும். எனவே தமிழக அரசு மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து அப்பர்பவானி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து அதை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: