கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

பீளமேடு,செப்.21:  தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று இரவு 9.30 மணியளவில் கோவை வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய உள்துறை மந்திரியை நானும் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசினோம். அப்போது அவரிடம் சில முக்கிய கோரிக்கைகளை வைத்தோம். நான் முதல் அமைச்சராக  இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

அதோடு காவிரி நதி நீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில் நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தையும்  செயல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். தமிழகத்தில் போதை பொருள் அதிகரித்து வருவதை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அதிமுக உள்கட்சி பூசல் பற்றி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அது பற்றி கருத்து சொல்ல முடியாது. காய்ச்சலை தடுப்பது அரசின் கடமை. இந்த அரசு விழிப்போடு இருந்து மக்களையும், குழந்தைகளையும் காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதன் பின்னர் அவர் கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.

12 மாணவர்கள் வாந்தி

சூலூர் அருகே உள்ள லட்சுமி நாயக்கன்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை மாணவர்கள் தேநீர் அருந்திய போது திடீரென வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் 12 மாணவர்கள் சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து வந்தனர். அங்கு மருத்துவர்கள் மாணவர்களை சோதனை செய்ததில் மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று மாணவர்கள் அனைவரும் பள்ளியில் உள்ள விடுதிக்கு பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: