விரிவாக்க பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் கிடைக்குமா?

கோவை செப்.21:  கோவை மாவட்டத்தில்  பில்லூர் 1, 3 திட்டம், சிறுவாணி, ஆழியாறு, அமராவதி, பவானி, பேரூர் கூட்டு குடிநீர், வடவள்ளி வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி, குனியமுத்தூர், கிணத்துக்கடவு குடிநீர் திட்டம் என 13 குடிநீர் திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டிற்கு முன் ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக 10 ஆண்டிற்கு 20 லட்சம் பேர் பயன்பெற்றனர். தற்போது பயனாளிகள் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்துவிட்டது. குறிப்பாக பில்லூர் திட்டம் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் கட்டன் மலையை குடைந்து குகை பாதை அமைத்து குடிநீர் கொண்டு வரும் பணி நடக்கிறது. இந்த திட்டத்திற்காக 160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணிகள் 50 சதவீதம் முடிந்துவிட்டது. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது மேலும் 5 லட்சம் பேர் பயன்பெறுவர். இதில் 6.5 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். காளப்பட்டி, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, கோவில்பாளையம், அன்னூர் வட்டாரங்களில் கூடுதல் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பில்லூர் திட்டம் கோவை மட்டுமின்றி திருப்பூருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மேலும் பல கிராம பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் பெரும்பாலான பகுதியை பில்லூர் திட்டத்தில் இணைத்து இதை பெரிய நெட்வொர்க் திட்டமாக மாற்ற ஏற்பாடு நடக்கிறது. பில்லூர் 4, 5 போன்ற திட்டங்களை நிறைவேற்ற சாத்திய கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. கோவையில் இந்த திட்டம் பூர்த்தி பெற்றதும், திருப்பூரின் பல இடங்களுக்கு பில்லூர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். பவானி ஆற்றிலும் எவ்வளவு குடிநீர் தேவை என்றாலும் பெற முடியும்.

தற்போது பவானியில் 6 இடங்களில் ராட்சத மின் மோட்டார் வைத்து குடிநீர் பெற்று சுத்திகரித்து வினியோகம் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சியில் விரிவாக்க பகுதிகளில் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இந்த பகுதியில் ஊராட்சி அளவிற்கு மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. மாநகர அந்தஸ்து இருந்தும் இங்ேக வசிக்கும் மக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த பகுதியில் கூடுதல் குடிநீர் வழங்கவேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். கோவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், ‘‘மாவட்ட அளவில், அன்னூர் வட்டாரத்தில் மட்டுமே சற்று குடிநீர் சப்ளை குறைவாக இருக்கிறது.

மாநகரில் தனி நபர் குடிநீர் 130 லிட்டர் எனவும், நகராட்சியில் 100 லிட்டர் எனவும், பேரூராட்சி, ஊராட்சிகளில் 70 முதல் 50 லிட்டர் எனவும் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. சராசரியாக 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளையாகிறது. மாவட்ட அளவில் 2238 குக்கிராம குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீரில் தேவையான அளவு ஆலம், குளோரின் கலக்கப்படுகிறது. மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்ட பணி நடக்கிறது. பில்லூர், சிறுவாணி, பவானி குடிநீர் அதிகளவு சப்ளையாகிறது.

மாவட்டத்தில் பல இடங்களில் ஆறு, நீர் தேக்கங்கள் இருப்பதால் தேவைக்கு ஏற்ப புதிய திட்டங்கள் துவக்குவதில் சிரமம் இருக்காது. போர்வெல் தண்ணீரை குடிநீராக பயன்படுத்துவது அரிதாக இருக்கிறது. பெரிய நிறுவனங்கள், கம்பெனிகள், வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கும் தேவைக்கு ஏற்ப குடிநீர் சப்ளையாகிறது. குடிநீர் பகிர்மான குழாய், பிரதான குழாய் போன்றவை தேவைக்கு ஏற்ப புதுப்பித்து தரப்படுகிறது ’’ என்றனர்.

Related Stories: