முறையான ஆவணங்கள் இல்லாத 53 ஆட்டோக்கள் பறிமுதல்: ரூ.4.20 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் முறையான ஆவணங்கள் இல்லாத 53 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.4.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதும் காரணமாக ஆட்டோக்கள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், முறையான ஆவணங்கள் இன்றியும், அதிக கட்டணம் வசூல் செய்தும் ஆட்டோக்கள் செயல்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தொடர் புகார் வந்துள்ளது. இதனைதொடர்ந்து, வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை ஆகியோர் இனைந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம், ஓரிக்கை உள்ளிட்ட பல பகுதிகளில் செல்லும் ஆட்டோக்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், முறையான அரசு பதிவு ஆவணங்களான எப்சி, இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை இல்லாத 53 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை இணைந்து பறிமுதல் செய்த வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், விதிமுறைகள் மீறியதற்கு உள்ளிட்ட குற்றங்களுக்கேற்ப அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி கொடுக்கப்பட்டன. இதனைதொடர்ந்து, அபராதம் செலுத்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருகைப்புரிந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் விதிமுறைகள் பின்பற்றும் முறை, விதிமுறை மீறினால் ஏற்படும் விபரிதம், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், இல்லாதவர்தளுக்கு விதிக்கப்படும் அபராதம், ஓட்டுநர் உரிமம் பெறும் முறைகள் என பல்வேறு அறிவுரைகளை வழங்கி அரசுக்கு பொதுமக்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். பறிமுதல் செய்யபட்ட வாகனங்களுக்கு ரூ.4.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தொடர்ந்து, இதுபோன்ற செயலில் வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டால் அபராதத்துடன் சேர்த்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: