வீட்டின் படுக்கை அறையில் தாய், குழந்தையை அடைத்து 15 சவரன் நகை, ரூ.50,000 கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஆவடி: வீட்டின் படுக்கை அறையில் தாய், குழந்தைகளை அடைத்துவைத்துவிட்டு 15 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்து தப்பிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆவடி அருகே திருநின்றவூர் அலமேலு மங்கை நகரில் வசிப்பவர் அப்பாஸ் (44). இவர், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். பொன்னேரியில் வசிக்கும் தனது பெற்றோரை பார்க்க கடந்த 17ம்தேதி,  சென்ற அப்பாஸ் அன்றைய இரவு அங்கேயே தங்கிவிட்டார். இதில், அவரது மனைவி தாஹிரா (30), தனது இரண்டு குழந்தைகளுடன் திருநின்றவூரில் உள்ள தனது வீட்டில் அன்று இரவு உறங்கிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், 17ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், தாஹிரா மற்றும் அவரது குழந்தைகள் உறங்கி கொண்டிருந்ததை பார்த்தவர்கள். படுக்கை அறையின் கதவை வெளிப்பக்கமாக தாழ்பாள் போட்டு  பக்கத்து அறையில் உள்ள பீரோவை திறந்து தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பித்துச் சென்று விட்டனர். அதிகாலையில் எழுந்த தாஹிரா கதவை திறந்தபோது திறக்கவில்லை என்றதும் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், செல்போனில் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து கதவை திறக்கச்செய்தார், இதன்பிறகு அவர் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து திருநின்றவூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். இதில்,  பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகைகள், 50 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: