கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம்

பள்ளிப்பட்டு: கரும்பு விவசாயிகளுக்கு  நிலுவைத்தொகை ஒரே தவனையாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில்  சொட்டு நீர் பாசனம் முறை மற்றும் கரும்பு மகசூல் அதிகரிப்பது குறித்து சாலை டிவிஷன் கரும்பு  விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்  ஆர்.கே.பேட்டை அருகே  சஹஸ்ரபத்மாபுரத்தில் நேற்று   நடந்தது. இதில் திருத்தணி  கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மலர்விழி  தலைமை வகித்தார். நடப்பு ஆண்டுக்கான  கரும்பு அரவை நவம்பர் மாதத்தில் துவங்க உள்ளது.  ஆலையில்,  இயந்திரக்கோளாறு தவிர்த்து தடையின்றி அரவை தொடர்ந்து நடைபெற ஏதுவாக ரூ.4 கோடியில்   ஆலையில்  பழுதுபார்க்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு  அரவை இலக்காக 2.25 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு ஆலைக்கு அனுப்ப முன் பதிவு செய்துக்கொண்டுள்ள விவசாயிகளுக்கு  முன் தேதியிட்டு அனைவரும் வெட்ட உத்தரவு வழங்கப்படும் என்றும்  தாமதமின்றி  வெட்டிய கரும்பு ஆலைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விளக்கினர். அப்போது விவசாயி  கே.சுதாகர்ராஜ் பேசுகையில், ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு 4 தவனைகளாக நிலுவைத் தொகை வழங்கப்படுவதால்,  விவசாயிகள் வட்டி மட்டுமே  செலுத்த முடிவதாகவும், ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என்றும் மேலும் தமிழக அரசு அறிவித்த டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கரும்பு பெருக்கு அலுவலர் வில்லியம் ஆண்டனி, கரும்பு அலுவலர் வித்யாசாகர், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக்குழு இயக்குநர் ஆனந்தன்,  திமுக மாவட்ட  பொறுப்புக்குழு உறுப்பினர் மா.ரகு,  கரும்பு உதவியாளர் திருவருள் செல்வன், வீரமங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர்  கே.அரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி சீனிவாசன் நன்றி  கூறினார்.

Related Stories: