ஊத்துக்கோட்டையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு 1 வருடம் சிறை

ஊத்துக்கோட்டை: கஞ்சா விற்பனை செய்த  வாலிபருக்கு 1 வருடம் சிறை  தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (23). இவர் தாராட்சி, பாலவாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து திருவள்ளூர் சப் - கலெக்டரிடம் ஆஜர்படுத்தினர். அப்போது சுனில் குமாரிடம், ‘’இனிமேல் கஞ்சா விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்தால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்’’ என்று எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில், பாலவாக்கம் பகுதியில் மீண்டும் ஒரு வாலிபர் கஞ்சா, குட்கா விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்படி, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தபோது கஞ்சா விற்பனை செய்த வாலிபரை கைது செய்து விசாரித்தபோது மேற்கண்ட பகுதியை சேர்ந்த சுனில்குமார் என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து 3 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி. சிபாஸ் கல்யாண் பரிந்துரையின்பேரில், திருவள்ளூர் சப் - கலெக்டர் மகாபாரதியிடம் ஆஜர்படுத்தி, சுனில்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையுடன் ரூ. 50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் சுனில்குமார் அடைக்கப்பட்டார். ‘‘இனிமேல் யாராவது ஊத்துக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்’ என்று போலீசார் கடுமையாக  எச்சரித்துள்ளனர்.

Related Stories: