ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் தலைமை காவலர்கள், முருகானந்தம், ராஜா மற்றும் போலீசார் நேற்று விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் மொத்தம் 2000 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்திய கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சீனிவாசன், ராமலிங்கம் மகன் அருள்மணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் இருந்து, குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கோழிப்பண்ணைகளுக்கு தீவனமாக விற்க கடத்தியது தெரியவந்தது. மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: