நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மக்கள் சாலை மறியல்

வேப்பூர், செப். 20:   வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள வாய்க்காலை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மழைநீர் வெளியேறாமல் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பலமுறை வருவாய் துறையினரிடம் முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள் 50 பேர் நேற்று காலை 10.30 மணியளவில் வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சியில் கடலூர்- சேலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் காவ்யா, வேப்பூர் வருவாய் ஆய்வாளர் மாலா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- சேலம் சாலையில் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: