காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை

கடலூர், செப். 20:  கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கடந்த 15 தினங்களாக பருவநிலை மாற்றத்தினால், சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள புதுச்சேரி மாநிலத்திலும் இதுபோன்ற காய்ச்சல் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கட்டுப்படுத்தும் விதமாக காய்ச்சல் ஏற்படும் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து அதன் மூலம் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேல்சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளுக்கு மேல்பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் முகாமில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்றவைகளும் பொதுமக்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது.  காய்ச்சல் அறிகுறிகள் மூன்று தினங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தேவைப்படும் நபர்களிடமிருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் டெங்கு, லெப்டோபைரோசிஸ், ஸ்கிரப்டைபஸ், டைபாய்டு போன்ற நோயினை கண்டறிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யும் பொருட்டு அனைத்து குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளையும் சுத்தம் செய்திடவும் தினந்தோறும் குளோரினேஷன் செய்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், டெங்கு போன்ற காய்ச்சலை பரப்புகின்ற கொசுக்களை கட்டுப்படுத்தும் விதமாக இம்மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கொசு புழு ஒழிப்பு பணி, புகைமருந்து தெளிக்கும் பணி, குளோரினேஷன் ஆய்வு பணி ஆகிய பணிகள் தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆகவே, பொதுமக்கள் காய்ச்சல் குறித்து எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை.

இது முற்றிலும் பருவகாலத்தில் ஏற்படும் சாதாரண சளி, காய்ச்சலே. இவற்றிற்கு சிகிச்சை அளித்திட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருந்து மாத்திரைகளும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்படும் நபர்களின் தேவைக்கேற்ப உடனுக்குடன் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இக்காய்ச்சல் பரவுவதை விரைந்து கட்டுப்படுத்த பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரை காய்ச்சி குடித்திடவும், தேவையற்ற பொருட்களை வெளியில் வீசி எரிவதை தவிர்த்திடவும்,

தங்கள் வீடு மற்றும் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்திடவும், காய்ச்சல், சளி போன்றவை ஏற்படின் சுயமாக சிகிச்சை மேற்கொள்வதையும், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொண்டு தங்களை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: