கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரி கம்மாபுரம் ஊராட்சி செயலர்கள் விடுப்பு போராட்டம்

கம்மாபுரம், செப். 13: கடலூர் மாவட்டம் முழுவதும் 683 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகங்களை கவனிக்கும் எழுத்தர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி செயலர்கள் எனப் பெயர் மாற்றப்பட்டனர். இவர்கள் மாத சம்பளம் 9,700 ரூபாய் பெற்று வந்தனர். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் இவர்கள் மூலம் தான் அமல்படுத்தப்படுகிறது. பணிச்சுமை கூடுதலாக இருந்தபோதும், அதற்குரிய சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதில்லை என புலம்பும் அவலம் நீடித்தது. அரசு துறைகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளருக்கு இணையான சம்பளம், கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக தங்களின் சங்கத்தை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்துடன் இணைத்துக்கொண்டனர். நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு, அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பதிவுறு எழுத்தர்களுக்கு வழங்கும் சம்பளத்தை வழங்க சம்மதம் தெரிவித்தது.

மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும், பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவடைந்தது. மேலும், 7வது கணக்கில் ஊராட்சி செயலர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, 7வது கணக்கில் போதிய நிதி இல்லாததால், கடந்த முன்று மாதம் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை கம்மாபுரம் ஒன்றியம் உட்பட பெரும்பாலான 13 ஒன்றியங்களில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள் இதுவரை பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு மிகவும் கவலையடைந்துள்ளனர். எனவே, இனி தங்களுக்கு கருவூலம் மூலம் சம்பளத்தை வழங்க கோரி கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் 34 பேர் ஊரக வளர்ச்சி துறையினரிடம் மூன்று நாள் விடுப்பு விண்ணப்பித்து விட்டு திரும்பினர். இதன் காரணமாக ஊராட்சி பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: