4 வழிச்சாலை பணிக்காக வெட்டப்படும் செம்மண்ணை தனியாருக்கு விற்கும் ஒப்பந்ததாரர்கள்

காட்டுமன்னார்கோவில், செப். 13:   கடலூர் மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிக்காக வெட்டப்படும் செம்மண்ணை ஒப்பந்ததாரர்கள் தனியாருக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இருந்து அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வரை ரூ.550 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக வீராணநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நிலத்தில் பணிதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு நிலங்கள் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் வருவாய்த்துறை அனுமதியின்பேரில் செம்மண் வெட்டப்பட்டு இந்த டாரஸ் லாரிகளின் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாரைக்கால் ஏரியில் முறைகேடாக சுமார் 30 அடி ஆழம் வரை தோண்டி செம்மண் கடத்தப்பட்டு மேற்கண்ட பணித்தளத்தில் கிடங்கு அமைத்து சேமிக்கப்பட்டது.

தற்போது சாலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் சாலை பணிக்காக வெட்டி எடுத்து சேகரிக்கப்பட்ட செம்மண்ணை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தனிநபரிடம் விற்று வருகின்றனர். மற்ற நேரங்களில் பகல் நேரத்தில் செல்லும் மண் லாரிகள் முறைகேடாக தனியார் நிலத்தை நிரப்பும்போது மட்டும் பொதுமக்கள் பார்க்காத வண்ணம் இரவு நேரங்களில் செல்கின்றனர். இதற்கு காட்டுமன்னார்கோவில் வருவாய்துறை துணை போவதாக தெரிவிக்கும் பொதுமக்கள் அரசு சொத்தினை தனியாருக்கு முறைகேடாக விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்போது தனியார் நிலத்தில் நிரப்பப்பட்ட செம்மண்ணை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்து முறையாக சாலை பணிக்கு ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தனியாருக்கு செம்மண்ணை முறைகேடாக விற்பதால் எதிர்வரும் வருடங்களில் சாலை பணிக்கு செம்மண் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது மீண்டும் அரசு நிலங்கள் ஏரி குளங்களில் மீண்டும் மண் அள்ளும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: