ஈர நிலங்கள் பட்டியலில் பிச்சாவரம் அலையாத்தி காடுகள்

சிதம்பரம்   செப்.  13:  கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் ஈர நிலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு சர்வதேச அரங்கில்  அங்கீகாரம் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில வனம், காஞ்சிபுரம் மாவட்டம் கில்லி பறவைகள் சரணாலயம், கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்பு நிலம், மிசோரம் மாநிலத்தில் உள்ள பாலா ஈர நிலம், மத்திய பிரதேசத்தில் சாக்கிய சாகர் ஆகிய ஐந்து இடங்களை  ராம்சர்,  ஈர நிலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு சர்வதேச அரங்கில் அங்கீகாரம் அளித்துள்ளது. உலகிலேயே மிகவும் பெரிய சதுப்பு நிலக்காடு பிரேசில் நாட்டில் உள்ளது. இரண்டாவது பெரிய சதுப்பு நிலக்காடு கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் அமைந்துள்ளது. தற்போது ராம்சர்  ஈர  நிலங்கள் பட்டியலில் இடம் பிடித்திருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இங்குள்ள சரபுண்ணை மரங்கள் அடர்ந்து வளர்வதால் அதனை விரிவு படுத்தும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த மரத்தில் வளரும் காய்கள் சேற்றில் தவழ்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மரமாக வளர்ந்து விடும்.

ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரை பல்வேறு நாடுகளில் இருந்து இனப்பெருக்கத்துக்காக  ஆளா, சின்ன உளான், கடல் காகம், காஸ்பியான் ஆளா, மண்கொத்தி, ஊசிவால்வாத்து, புள்ளி மூக்கு வாத்து என ஏராளமான பறவைகளுக்கு புகலிடமாக பிச்சாவரம் காடு விளங்கி வருகிறது.  உப்பனாற்றின் கடற்கரையையொட்டி 3.5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்வாய் உள்ளது. இங்குள்ள தாவரங்கள் தொழு நோய்க்கு மருத்துவ குணம் கொண்டது என உலக அளவில் பேசப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் தலவிருட்சமாக கருதப்படும் தில்லை மரம் உட்பட 18 வகையான மூலிகை தாவரங்கள் இந்த காட்டில் உள்ளன. அலையாத்தி சதுப்பு நில காடுகளில் படகு மூலம் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கையை ரசித்து  வருகின்றனர்.  

தமிழகத்தில் இயற்கையாக அமைந்த மிகப்பெரிய சதுப்பு நில காடு, பேரிடர்களை காக்கும் இயற்கை கேடயமாகவும் உள்ளது. கடல் தாவரங்கள், கடல் உயிரினங்கள், அதிகமாக இருக்கக்கூடிய இடம் பிச்சாவரம்.தமிழகத்தில் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். வெளிநாடு, வெளி மாநிலம், உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணிகள் வந்து பெரிதும் பார்த்து ரசித்து செல்கின்றனர். ஈர நிலங்கள் எனப்படுபவை உலகிற்கு இயற்கை அளித்த கொடையாகும். இவற்றை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டில் ராம்சார் நகரில் ஐ.நா. அமைப்பின் ஏற்பாட்டில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை தான் ராம் சார் உடன்படிக்கையாகும். இதன்படி சதுப்பு நிலங்களை காப்பதற்காக உலக அளவில் அதற்கு அங்கீகாரம் கொடுத்து ராம் சார் எனும் குறியீட்டை உருவாக்கி பல்வேறு இடங்களை இணைத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இதில் இணையும் இடங்களை ராம் சார் குறியீட்டு இடங்கள் என மதிப்பிடப்பட்டு அதன் வளங்கள் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பட்டியலில் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் பிச்சாவரம் சதுப்பு நில காடுகள், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை  மீனவர்கள், படகு ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இவற்றை. பாதுகாக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: