திருமணமான 8 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

விருத்தாசலம், செப். 9: விருத்தாச்சலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகள் சந்தியா(21). டிப்ளமோ ஆர்க்கிடெக் படித்து முடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான முருகன் மகன் பன்னீர்செல்வம் (27) என்பவருக்கும் கடந்த மாதம் 31ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சொந்த உறவினர் மகளை திருமணம் செய்து கொண்ட பன்னீர்செல்வம் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த போது மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என சந்தியா கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சந்தியா கணவருடன் சில கருத்து வேறுபாட்டுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை சந்தியா குளித்துவிட்டு வருவதாக கூறி குளியலறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த  உறவினர்கள், உள்ளே சென்று பார்த்தபோது குளியல் அறையில் அவர் இல்லை. ஆனால் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து  பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், விரைந்து சென்ற காவல்துறையினர், சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி 8 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், இளம்பெண் கணவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: