கள்ளக்குறிச்சி அருகே துணிகரம் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி,செப். 9:     கள்ளக்குறிச்சி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, செல்போன், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த புத்தந்தூர் கிராமத்தில் நேற்று  முன்தினம்  தேர்திருவிழா மற்றும் தீ மிதிதிருவிழா நடைபெற்றது. இந்நிலையில்  அந்த  கிராமத்தை சேர்ந்த அய்யாகண்ணு என்பவரது மனைவி தனது நகையை   போட்டுக்கொண்டு தேர் திருவிழாவில் பங்கேற்றார். அதே கிராமத்தில் மாலை   நேரத்தில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் பங்கேற்க சென்றுள்ளார். அங்கு   மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால் கழுத்தில் அணிந்திருந்த   4பவுன் தங்க நகையை கழற்றி வீட்டில் வைத்துள்ளார். பின்னர் வீட்டை   பூட்டிவிட்டு அய்யாகண்ணு குடும்பத்தினர் தீமிதி திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.

தீமிதி   திருவிழா முடிந்து அய்யாகண்ணு குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து   பார்த்தபோது பூட்டிய வீடு திறந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.   பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4பவுன் நெக்லஸ் மற்றும்   3 பவுன் மோதிரம், ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ரூ. 5 ஆயிரம் பணம்   ஆகியவை திருடு போனது தெரியவந்தது. வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அய்யாகண்ணு கொடுத்த  புகாரின் பேரில்  கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டில்  கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கோயில்திருவிழா நடந்தபோது பட்டக்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை   கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: