பாலம் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்

இடைப்பாடி, செப்.7: இடைப்பாடி அருகே பெரியஏரி பகுதியில் பாலம் அமைத்து தரக்ேகாரி கிராமமக்கள் பள்ளி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பெரியஏரி தற்போது நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இந்த ஏரியின் அருகே வெள்ளுற்று பெருமாள் கோயில் செல்லும் சாலை, செட்டிக்காடு, பனங்காடு, குட்டைமனை, வால்பாறை, பொன்னப்பன்காடு, சின்னயிர்காடு ஆகிய பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரிய ஏரி அருகேயுள்ள சாலையை கடந்துதான் இடைப்பாடிக்கு செல்ல வேண்டும். தற்போது பெரிய ஏரி நிரம்பியுள்ளதால், அந்த சாலையில் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் தினமும் இவ்வழியாக சென்று வரும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் தண்ணீர் தொடர்ந்து செல்வதால் அங்கு பாசனம் பிடித்துள்ளது. இதனால் சிலர் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பாலம் அமைக்க கோரி, அப்பகுதி மக்கள் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பாசனத்தை சுத்தம் செய்து தரவேண்டும். மேலும் இந்த பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மேலும், பெரிய ஏரி வழியாக பள்ளி களுக்கு சென்றால் 1 கிலோ மீட்டர் தூரம் தான். ஆனால் நாங்கள் சுற்றி செல்ல வேண்டும் என்றால் 7கிலோ மீட்டரை கடந்துதான் செல்ல முடியும். எனவே இங்கு பாலம் அமைத்து தரவேண்டும் என கோரி பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் என 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: