2 வீடுகளில் நகை திருட்டு

மேட்டூர், செப்.7:  சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகேயுள்ள சாணார்பட்டி  ஊராட்சி சப்பாணிப்பட்டியை சேர்ந்தவர் விஜயநாராயணன் (41). பட்டுச்சேலைகளுக்கு பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் தளத்தில் தூங்கினர். நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த சுமார் இரண்டு பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். மேலும் விஜயநாராயணனின் பக்கத்து வீட்டின் கேட்டை திறந்து மர்ம நபர் கள் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கு ஆட்கள் இருந்ததால் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதேபோல் வனவாசி லெனின் நகரை சேர்ந்த யுவராணி(39). இவரது கணவர் வெங்கடாதாஸ், பட்டு கைத்தறி தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு யுவராணி தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் யுவராணியின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்து நங்கவள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள், மோப்பநாய் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, ஜலகண்டாபுரம் இன்ஸ்பெக்டர் ஆனந்த்ராஜ் ஆகியோரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories: