கோமங்கலம் ஊராட்சியில் ஒரு மாதமாகியும் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பாதிப்பு

விருத்தாசலம், செப். 7: கோமங்கலம் ஊராட்சியில் ஒரு மாதமாகியும் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலம் ஊராட்சியில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கோமங்கலம், பரவலூர், தொரவலூர், முகுந்தநல்லூர், கொடுக்கூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த குறுவை நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது குறுவை சாகுபடி முடிவடைந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனைக்காக குவித்துள்ளனர். இந்நிலையில் இங்குள்ள பணியாளர்களின் மெத்தன போக்கின் காரணமாக கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் செய்யாத சூழ்நிலையில் விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து வெயிலிலும் மழையிலும் காத்து வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களாக விருத்தாசலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அவ்வப்போது நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளதால் விவசாயிகள் மேலும் கவலை அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது விவசாய நிலத்தில் பாடுபட்டு, சிரமப்பட்டு கொண்டு வந்த நெல் மூட்டைகளை இங்கு ஒரு மாதமாக அடுக்கி வைத்து வருகின்றோம். இதனால் குடும்பத்தை கவனிக்க முடியாத சூழ்நிலையில் ஒரு மாத காலமாக இங்கேயே வெயிலிலும் மழையிலும் காத்து கிடக்கின்றோம். மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நெல் மணிகள் அனைத்தும் நனைந்து குறைவான விலைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயத்துக்கு செய்த செலவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கோமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைவில் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: