சட்டமுறை எடையளவு பின்பற்றாத 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: உதவி ஆணையர் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் சட்டமுறை எடையளவு பொட்டல பொருட்கள் சான்று பெறாமல் உள்ள பொட்டலம் இடுதல், பதிவு சான்று பெறாமல் உள்ள பொட்டல பொருட்களை இறக்குமதி செய்தல், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொட்டல பொருட்களை விற்பனை செய்வதை கண்டறிய அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 45 நிறுவனங்களின் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட 45 நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா கூறும்போது, ‘’பதிவுச் சான்று பெறாமல் உள்ள பொட்டலம் இடுபவர், இறக்குமதியாளர்கள், உரிய பதிவுச் சான்று பெற வேண்டும். சட்டமுறை எடையளவு விதிகளை பின்பற்றி விற்பனை செய்ய வேண்டும்.

விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் உரிய அறிவிப்புக்கள் இல்லாமல் விற்பனை செய்ய கூடாது. தவறும் பட்சத்தில் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Related Stories: