திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பொது துறை வங்கியில் கூடுதல் ஊழியர்களை நியக்க வேண்டும்: வாடிக்கையாளர்கள் கோரிக்கை

திருப்போரூர்:  திருப்போரூரில் உள்ள பொது துறை வங்கியில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை  வைத்துள்ளார். திருப்போரூரில் ஓ.எம்.ஆர். சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது துறை வங்கி  ஒன்று செயல்பட்டு வருகிறது. திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம், ஆலத்தூர், தண்டலம், மடையத்தூர், செம்பாக்கம், இள்ளலூர், செங்காடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த வங்கியில்தான் தங்களின் வங்கி கணக்கை தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கந்தசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளின் அரசுக்கணக்கும் இந்த வங்கியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழு கணக்குகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஆகியவற்றின் கணக்குகளும் வங்கியில்தான் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், காலை வங்கி திறப்பதற்கு முன்பிருந்தே கூட்டம் வங்கியின் முன்பு திரண்டு காத்திருக்கின்றனர்.

மேலும், வங்கி திறந்தவுடன் உள்ளே சென்று தங்களுக்குத் தேவையான வேலைகளை செய்து முடிக்க திரள்கின்றனர். வங்கிக்கு வரும் கூட்டத்திற்கு ஏற்ப வங்கியில் போதுமான ஊழியர்கள் இல்லை. மேலும், கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் படிக்கத் தெரியாத பாமர மக்கள் வங்கியின் விண்ணப்ப படிவங்களை நிரப்பித் தர முடியாமல் அவதிப்படும் நிலையும் உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் தினசரி வாய்த்தகராறு ஏற்படுகிறது. ஊழியர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான கேட்புக்காசோலை பெறுதல், வங்கிக் கடன் பெறுதல், நகைக்கடன் பெறுதல் போன்ற சேவைகளை பெற முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

இதுமட்டுமின்றி, திருப்போரூர் பகுதியில் உள்ள மற்ற வங்கிகளுக்கு முதன்மை வங்கியாக இந்த பொது துறை வங்கி இருப்பதால் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவி தொகை போன்ற பயன்களும் இந்த பொது துறை வங்கி மூலமாகேவ வழங்கப்படுகிறது. மாணவர்கள் புதிய வங்கிக் கணக்கு தொடங்க வந்தால் அவர்கள் பல காரணங்களை கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

ஆகவே, கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் வங்கியின் செயல்பாடுகள் மாறவேண்டும் என் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், ஊழியர்களின் எண்ணிக்கையும், வசதிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Stories: