செய்யூர் - புதுச்சேரிக்கு நேரடி அரசு பஸ் சேவை: பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: செய்யூரில் இருந்து புதுச்சேரி வரை நேரடி அரசு பேருந்து சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமப்புறங்களிலிருந்து செய்யூருக்கு வந்து, சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இதனால், செய்யூருக்கு சென்னை, தாம்பரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு  பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  ஆனால், செய்யூரிலிருந்து புதுச்சேரிக்கு அல்லது புதுச்சேரியிலிருந்து செய்யூருக்கு நேரடி அரசு பேருந்து சேவை இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பல்வேறு பேருந்துகளில் செய்யூர் வந்து இறங்கி, பின்னர் அங்கிருந்து  எல்லையம்மன் கோயில் பகுதி வரை ஷேர் ஆட்டோக்களில் சென்று, அங்கிருந்து புதுச்சேரி பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பல்வேறு தேவைகளுக்காக புதுச்சேரி செல்லும் பயணிகள் சோர்வடைவதுடன் கால விரயம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.  

செய்யூரில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி அரசு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டால், கால விரயம் ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று திரும்பவும் முடியும் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, செய்யூரில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி அரசு பேருந்து சேவை ஏற்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: