ஊராட்சி தலைவரை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்

திருவள்ளூர்: சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அருமந்தை கிராமத்தை சேர்ந்தவர் விக்ரமன். இவர் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஒரு சிலர் ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தடுப்பதுடன் பொய்யான புகார்களை காவல் நிலையத்தில் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆர்.கண்ணன் என்பவரும் அவரது உறவினர்கள் கேசவன், குப்பன் ஆகியோர் ஆக்கிரமித்து அனுபவித்து வரும் சுமார் 3 ஏக்கர் புறம்போக்கு நிலங்களை அவர்கள் வசமாக்க ஊராட்சி மன்றத் தலைவரை அணுகிய நிலையில் அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த எம்.சுதாகர், என்.சுதாகர் ஆகியோர்  தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக காவல் நிலையத்திலும் விக்ரமன் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து துணை தலைவர் ஆர்.கண்ணன் ஆக்கிரமித்த இடத்தை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் சென்றனர்.

அப்போது ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஆர்.கண்ணனின் ஆதரவாளர்கள் சிலர் ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் லஞ்சம் கேட்பதாக கூறி சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமனை கொடியேற்றவிடக்கூடாது என்றும், கிராம சபைக் கூட்டத்தில் கைது செய்யவும் காவல் துறையினருடன் இணைந்து ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் சிலர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் விக்ரமன் சுதந்திர தினத்தன்று முன்னதாகவே நேற்று முன்தினம் காலை தேசியக் கொடியை ஏற்றிவிட்டு மாயமானதால் அவரைக் கண்டுபிடித்து தருமாறும், பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருமந்தை கிராம மக்கள் 60க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: