சாலையில் பிறந்தநாள் கொண்டாடியபோது இரு தரப்பினர் திடீர் கோஷ்டி மோதல் திருவள்ளூர் அருகே பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலையில் பிறந்தநாள் கொண்டாடியபோது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட திடீர் கோஷ்டி மோதலில் 3 பேருக்கு வெட்டு விழுந்தது. திருவள்ளூர் அடுத்த புதூர் கிராமம் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் மோகன்(21), நேற்று முன்தினம் இவரது நண்பர்களான திருவள்ளூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பெரியார் நகரைச் சேர்ந்த பிரகாஷ், பிரசாந்த் மற்றும் புஷ்பராஜ் ஆகியோர் சேர்ந்து அஜீஸ் என்ற நண்பனுக்கு பிறந்த நாள் கேக் வெட்ட நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜெ.என்.ரோடு, காந்திபுரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகன் சந்தோஷ்(23) மற்றும் யோகேஷ் ஆகிய இருவரும் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது பிறந்த நாள் கேக் வெட்டுவதற்காக நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தவர்களை பார்த்து கூச்சலிட்டவாறு, தகாத வார்த்தைகளால் பேசியபடி சென்றுள்ளனர்.  இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், பிரகாஷ், பிரசாந்த் ஆகியோர் சந்தோஷை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து சந்தோஷின் தம்பியான ஆகாஷூக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆகாஷ் தனது நண்பர்களான தேவா, விஜி, ஆபேல், எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சரவணா ஆகியோருடன் காக்களூர் பைபாஸ் சாலையில் தகராறு நடந்த இடத்திற்கு வந்து அங்கு பிறந்த நாள் கேக் வெட்ட காத்திருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரசாந்த் தலை மற்றும் இடது கன்னத்தில் சரமாரியாக வெட்டினார். மேலும் மோகன் மற்றும் பிரகாஷ் ஆகியோரையும் கத்தியால் தலை மற்றும் முகத்தில் வெட்டியுள்ளனர். அப்போது அங்கு பொதுமக்கள் வருவதை கண்டதும் கொலை மிரட்டல் விடுத்ததோடு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதை கண்ட பொதுமக்கள் கத்தியால் வெட்டி தலையில் பலத்த காயம் அடைந்தவர்கள் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மோகனுக்கு 6 தையலும், பிரகாஷூக்கு 12 தையலும், பிரசாந்துக்கு 14 தையலும் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மோகன், பிரகாஷ், பிரசாந்த் ஆகியோர் சேர்ந்து தாக்கிய சந்தோஷூம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தனது மகன் சந்தோஷை தாக்கியதாக அவரது தந்தை ராஜசேகர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல் புதூர் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் தன்னையும், தனது நண்பர்களான பிரசாந்த், பிரகாஷ் ஆகியோரையும் கொலைவெறி தாக்குதல் நடத்திய சந்தோஷ், ஆகாஷ், யோகேஷ், தேவா, விஜி, ஆபேல், சரவணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இரு தரப்பினர் மோதல் குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காக்களூர் பைபாஸ் சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: