×

பணத்தை பெற்று மோசடி செய்த தனியார் நிதி நிறுவனம் ஊழியர்கள் மேலும் 2 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பணத்தை பெற்று மோசடி செய்த  தனியார் நிதி நிறுவனம் ஊழியர்கள் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வங்கிசாரா தனியார்  நிதிநிறுவனம் (ஐஎப்எஸ்) காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 5ம் தேதியன்று தமிழகம் 21 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் பகுதியில் இந்த நிறுவனத்தின் முகவராக செயல்பட்ட மின்மினி சரவணகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மின்மினி சரவணகுமார் சரியாக ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களின் இயக்குனராக இருந்து வரும் ஜெகன் என்கின்ற ஜெகநாதனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சுப்புராஜ் என்பவர் மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.

 எனவே, அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், சுப்புராஜ் வங்கிக் கணக்கில் எட்டு கோடி ரூபாய் இருந்துள்ளது. போலீசாரின் விசாரணைக்கு முறையாக பதில் அளிக்காததால் இவர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்களை ஏமாற்றி முதலீடு பெறுவது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் ஜெகநாதன் மற்றும் சுப்புராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 136 இயக்குனர்களில் மூன்று இயக்குனர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பல இயக்குனர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதன் பின்பாக அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வேலூரை மையமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தின் தலைவராக இருந்து வரும் லட்சுமி நாராயணன் என்பவரை துபாயில் பதுங்கியிருப்பதாகவும், அவரை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...