பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரூ.1.4 லட்சம் கோடி கடன் டெபாசிட் 12.35% உயர்வு

சென்னை: பாங்க் ஆப் மகாராஷ்டிரா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1.4 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது. இது 27.1 சதவீத வளர்ச்சியாகும். பாங்க் ஆப் மகாராஷ்டிரா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த வங்கி கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.1,40,561 கோடி கடன் வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 27.1 சதவீதம் அதிகமாகும். பிற பொதுத்துறை வங்கிகளை விட கடன் வழங்கலில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது. ஐஓபி 16.43 %, பாங்க் ஆப் பரோடா 15.73 % , எஸ்பிஐ 13.66 %  முந்தைய நிதியாண்டை விட கூடுதலாக கடன் வழங்கியுள்ளன.

இருப்பினும் கடன் வழங்கிய தொகையை பொறுத்தவரை பாங்க் ஆப் மகாராஷ்டிராவை விட எஸ்பிஐ 17 மடங்கு அதிகமாக ரூ.24,50,821 கோடியும், பாங்க் ஆப் பரோடா 5 மடங்கு அதிகமாக ரூ.6,95,493 கோடியும் கடன் வழங்கியுள்ளன. இதுபோல், பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கடந்த காலாண்டில் ரூ.1,95,909 கோடி டெபாசிட் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12.35 சதவீத வளர்ச்சி. இதற்கு அடுத்த இடங்களில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா உள்ளன என பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி தெரிவித்துள்ளது.

Related Stories: