வண்ணாரப்பேட்டை, நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 2 நடைபாதை பிளாசா மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் ரூ.45 கோடி செலவில் விரைவில் 2 நடைபாதை பிளாசா அமைக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு மற்றும் நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில், பொதுமக்கள் வசதிக்காக, ரூ.45 ேகாடி மதிப்பில் 2 நடைபாதை பிளாசாக்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. இதில், உள்கட்டமைப்பு மற்றும் கல் போன்ற வடிவமைப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இங்கு வண்டிப்பாதை, கிரானைட் நடைபாதை, பிரத்யேக குழாய்கள், நவீன விளக்குகள், இருக்கைகள், தோட்டங்கள் போன்றவை அமைக்க திட்டமிட்டுள்ளது. மாநகராட்சி உயரதிகாரி கூறுகையில், ‘வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு மிகவும் பழமையான வர்த்தக சாலையாகும்.

இது உள்கட்டமைப்பு மற்றும் பொது இடத்தை மேம்படுத்துவதற்கு தகுதியானது. இங்கு மெட்ரோ ரயில் இணைப்பு, நடைபயிற்சி மற்றும் பிற நவீன வசதிகள் சுற்றியுள்ள பகுதிகளின் வர்த்தகத்தை மேம்படுத்த உதவும். இது வடசென்னையின் ஒரு பகுதியாகும்.  காதர் நவாஸ் கான் சாலை ஏற்கனவே உயர்தர ஷாப்பிங் ஏரியாவாக உள்ளது. இருப்பினும் இங்கு உள்கட்டமைப்பு மேம்படுத்தல் தேவை ஆகும். இதன் மூலம் இப்பகுதியில் நவீன வகுப்பு பொது இடத்தை கொண்டு வர முடியும். அந்த பகுதிக்கு புதிய பார்வையாளர்களையும் கொண்டுவர முடியும். மேலும் இந்த வசதியால் அப்பகுதி குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள்’ என்றார்.

Related Stories: