திருமங்கலத்தில் மால் வளாகத்தில் உள்ள பிரபல ஓட்டல் உணவில் புழு, கரப்பான் பூச்சி உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

அண்ணாநகர்: திருமங்கலத்தில் பிரபல மால் வளாகத்தில் உள்ள ஓட்டலில் வாடிக்கையாளர் வாங்கிய உணவில் புழு, கரப்பான் பூச்சி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த ராணி (35), நேற்று முன்தினம் இரவு தனது மகனுடன் திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலுக்கு சென்றார். பின்னர், அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று, தனது மகனுக்கு சோலா பூரி ஆர்டர் செய்தார். சற்று நேரத்தில் சப்ளையர் சோலா பூரியை கொண்டு வந்து கொடுத்தபோது, அதில் இருந்து கெட்டுப்போன வாசம் வீசியுள்ளது. இதனால், அந்த பூரியை உடைத்து சோதனை செய்தபோது, அதில் 5க்கும் மேற்பட்ட புழுக்களும்,கரப்பான் பூச்சிகளும் நெளிந்துகொண்டிருந்தன. இதை பார்த்து ராணி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததுடன், விருப்பம் இருந்தால் சாப்பிடுங்கள்.

இல்லையென்றால் இடத்தை காலி செய்யுங்கள், என மிரட்டியதாக தெரிகிறது. துபற்றி ராணி, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில்,  திருமங்கலம் போலீசார் வந்து ராணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் வாங்கிய சோலா பூரியில் இருந்த புழுக்களை போலீசாரிடம் காண்பித்தார். இதையடுத்து, போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.  பின்னர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி வந்து ஆய்வு செய்தார். சோலா பூரிக்கு பிசைந்து வைத்திருந்த மாவில் அதிகப்படியான புழுக்கள் இருந்ததாகவும், மாவு கெட்டுப் போனதில் புளித்த வாடை அடித்ததாகவும் தெரிகிறது.

இதையடுத்து ஓட்டலில் உள்ள சமையல் அறை முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அந்த ஓட்டலுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய பிரபல மாலில் உள்ள உணவகத்தில் சோலா பூரியில் புழுக்கள் கிடந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன், தாம்பரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணியில் புழு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: