வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடி

சேலம்: சேலத்தில் வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடியை போலீசார் தேடி வரும் நிலையில், படுகாயம் அடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் குமாரசாமிபட்டியை சேர்ந்தவர் முரளி(28). இவர் காந்தி ஸ்டேடியம் பின்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீரங்கனுக்கும்(35) பழக்கம் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். சமீப காலமாக ஸ்ரீரங்கன் அழைத்தால், முரளி எங்கும் செல்வது இல்லை. இதனால் ரவுடி ஸ்ரீரங்கன் கோபத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில், வெளியே செல்ல வருமாறு முரளியை அழைத்தார். அவர் செல்ல மறுத்து விட்டார்.

நான் அழைத்தால் வரமாட்டாயா? நீ பெரிய ஆளாகி விட்டாயா? என கேட்டுக்ெகாண்டு அரிவாளால் ரவுடி ஸ்ரீரங்கன் வெட்டினார். அங்கிருந்து முரளி தப்பி ஓடிய நிலையில், ஓட,ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். இதில் தலை, கை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டுடன் விழுந்து கிடந்த முரளியை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய ரவுடியை அஸ்தம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஓட,ஓட விரட்டி ரவுடி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: