ஒரே மாதத்தில் 104 சுகப்பிரசவங்கள் கவனம் ஈர்க்கும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள்

சேலம்: சேலத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான வசதிகளுடன் தரம் உயர்ந்துள்ளதால்,  சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டு பணிகள் அதிகரித்துள்ளது. இதில் சுகாதாரத்துறையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வகையில், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான வசதிகளுடன், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருவதால் சிகிச்சைக்கு வருவோர் மற்றும் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதில் சேலம் மாநகரில் செயல்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்காக தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 16 மருத்துவ அலுவலர்கள், 64 செவிலியர்கள், 84 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும் எம்பிபிஎஸ் படித்தவர்களே மருத்துவ அலுவலர்களாக உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி, காய்ச்சல், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மகப்பேறு சிகிச்சைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் பெண்கள், பிரசவத்திற்கு வரும் பெண்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து சேலம் மாநகர நலஅலுவலர் யோகானந்த் கூறியதாவது: சேலம் மாநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை பொறுத்தமட்டில், பிரசவரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள சுகாதார நிலையங்களில் மாதத்திற்கு சராசரியாக 70 முதல் 80 சுகப்பிரசவங்கள் மட்டுமே நடந்தது. தற்போது பிரசவத்திற்கான நவீன  உபகரணங்கள் அதிகளவில் தருவிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது 100 முதல் 105 சுகப்பிரசவம் நடந்து வருகிறது. இங்கு முடிந்த வரை சுகப்பிரசவம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் முடியாத பட்சத்தில், அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கிறோம். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு செல்ஸ் கவுண்ட்ஸ் எடுக்கப்படுகிறது. இரும்பு சத்து தொடர்பான பொருட்கள் வழங்கப்படுகிறது. இங்கு பிரசவம் நல்லமுறையில் நடப்பதால், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இங்கு பணிபுரியும் டாக்டர்கள் எம்பிபிஎஸ் படிப்பு முடித்தவர்கள். செவிலியர்கள் பிரசவத்தில் கைத்தேர்ந்தவர்கள். இதேபோல் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் மற்றும் இதர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் குறித்த மக்களின் பார்வை முற்றிலும் மாறியுள்ளது. இங்குள்ள 16 நகர்ப்புற நலமையங்களில், கடந்த ஜூலை மாதம் மட்டும் 104 சுகப்பிரசவங்கள் நடந்துள்ளது. சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நகர்ப்புற சுகாதார செவிலியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், மேயர்  ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்து பாராட்டி ஊக்கமளித்து வருகின்றனர். இவ்வாறு யோகானந்த் கூறினார்.

Related Stories: