செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், செல்லாண்டியம்மன் கோயில் தேரோட்டத்தின் போது, வீடுகள் தோறும் கிடா வெட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர். சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர் திருவிழா நடத்துவது வழக்கம். நடப்பாண்டு விழா, கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கருப்பண்ணசாமி பூஜை, கன்னிமார் பூஜை, அரண்மனை பொங்கல், சக்தி அழைத்தல் மற்றும் ஊர் பொங்கல், மாவிளக்கு பூஜைகள் விமரிசையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதனையொட்டி, அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பெருமாள் கோயில் தெரு, மேட்டு தெரு, ஜங்களாபுரம் மேற்கு வீதி, கிழக்கு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக விநாயகர் கோயிலை தேர் வந்தடைந்தது. விழாவையொட்டி, வீடுகள்தோறும் கிடா வெட்டி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: