எருமப்பட்டி வட்டாரத்தில் மல்லிகை அறுவடை தீவிரம்

சேந்தமங்கலம்: விலை உயர்வு எதிரொலியாக, எருமப்பட்டி வட்டாரத்தில் மல்லிகை அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எருமப்பட்டி வட்டாரம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, பவித்திரம், பவித்திரம் புதூர், நவலடிப்பட்டி, வரகூர் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் மல்லிகை சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக மகசூல் அதிகரித்த நிலையில், விசேஷ நாட்கள் இல்லாததால் கிலோ ₹200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, ஆடி மாதம் நிறைவு பெறும் நிலையில், ஆங்காங்கே உள்ள கோயில்களில் விசேஷங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

நாமக்கல், திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் மல்லிகை கிலோ ₹700 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி வட்டார பகுதியில் மல்லிகை அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. பறிக்கும் பூக்களை மொத்தமாக மூட்டை கட்டி கிலோ கணக்கில் விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: