இணை இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மானிய விலை உரங்களுடன், இதர இணை இடுபொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக் கூடாது என உர விற்பனையாளர்களுக்கு, வேளாண்மை இணை இயக்குநர் முகமது அஸ்லம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கார் மற்றும் காரீப் சாகுபடி பருவத்தில், 51 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பருவத்திற்கு தேவையான யூரியா- 1,523 டன், டி.ஏ.பி. - 1,174 டன், பொட்டாஷ் - 808 டன், காம்ப்ளக்ஸ் - 4,813 டன், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  அனைத்து உர விற்பனை நிலையங்களிலும், அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் விருப்பதற்கு மாறாக, மானிய விலை உரங்களுடன், இணை இடுபொருட்களை வாங்க அவர்களை கட்டாயப் படுத்தக்கூடாது.

கடைகளில் உள்ள உர இருப்பும். விற்பனை முனைய கருவியில் உள்ள உர இருப்பும் சரியாக இருக்க வேண்டும். உர இருப்பு பலகையை விவசாயிகளின் பார்வையில் படும் வகையில் கடையில் வைக்க வேண்டும். உர உரிமத்தை புதுப்பிக்காமல், உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாமல் கிடங்குளில் இருப்பு வைத்திருப்பது, உரிய அனுமதியின்றி பிற மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்வது, அனுமதியின்றி உர விற்பனை செய்தல், ஒரே நபர்களுக்கு அதிகப்படியான உரங்களை விற்பனை செய்வது போன்றவற்றை கண்டறியப்பட்டால், உரக்கட்டுப்பாட்டு ஆணையின் படி உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும், உர தொடர்பான புகார்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகிட விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: