×

நெல்லையில் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு; ஜவுளிப் பூங்கா அமைக்க திட்டம்: ரூ.2.50 கோடி மானியம் என கலெக்டர் விஷ்ணு தகவல்

நெல்லை: நெல்லையில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தொழில் முனைவோர்களுக்கு கலெக்டர் விஷ்ணு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக ரூ.2.50 கோடி அரசு மானியம் வழங்கப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் சோலார் பூங்கா அமைப்பதற்காக தற்போது 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் ஜவுளித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ஜவுளிப்பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஜவுளி என்றாலே திருப்பூர், ஈரோடு போன்ற வட மாவட்டங்கள், வட மாநிலங்களுக்கு தான் கொள்முதலுக்கு செல்ல வேண்டியுள்ளது. நெல்லையை பொறுத்தவரை பிரபலமான ஜவுளிக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. இந்த ஜவுளி நிறுவனங்களில் ஜவுளி எடுக்க கேரளாவில் இருந்தும் பொதுமக்கள் அதிகமானோர் வருகின்றனர். அதே நேரத்தில் ஜவுளி துணிகள் கொள்முதல் செய்ய வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நெல்லையில் ஜவுளித் தொழிலுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், முதற்கட்டமாக சிறிய அளிவிலான ஜவுளிப் பூங்காவை துவக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை கலெக்டர் விஷ்ணு கூறியிருப்பதாவது: ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழக அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கும் சலுகைகளை நெல்லை மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும். இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு துணி நூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநரைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Vishnu ,
× RELATED இந்தியா கூட்டணி பிரசாரத்தில் ரகளை பாஜக கவுன்சிலர் மீது வழக்கு